ட்ரெண்டிங்

சேலத்தில் அண்ணாமலையின் "We The Leaders" முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம் !

 

சேலம் அயோத்தியாபட்டினம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K. Annamalai அறிவித்துள்ள "We The Leaders" அமைப்பின் முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட வீரபாண்டி, ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் ஏற்காடு சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, கிராமங்கள் தோறும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்துவது மற்றும் மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்திற்குப் பிறகு பேசிய நிர்வாகிகள், "அண்ணாமலை தலைமையை நம்பி இளைஞர்கள் அதிக அளவில் இந்த அமைப்பில் இணைந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் தற்போது 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். கிராமங்கள் தோறும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தி மேலும் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் தீவிரப்படுத்தப்படும்" என்றனர்.

மேலும், "அண்ணாமலை தனது புதிய கட்சியைத் தொடங்கும் முன் அதன் கொள்கை மற்றும் கொள்கைத் தலைவர்களை அறிவிப்பார். அதன்பிறகு இளைஞர்களின் ஆதரவு மேலும் அதிகரிக்கும்" என்றும் அவர்கள் தெரிவித்தனர்