ட்ரெண்டிங்

திடக்கழிவு மேலாண்மை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி: மேயர் பங்கேற்பு !

 

சேலம், ஜூன் 9:

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் எஸ்.கே. டவுன்ஷிப் பகுதியில் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு மரக்கன்று விழாவை துவக்கி வைத்தார்.

இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்துள்ள திடக்கழிவு மேலாண்மை விதிகள்–2026, கடந்த ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அவற்றை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் நிகழ்ச்சியில் சேலம் மாநகர மேயர் ,ராமச்சந்திரன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார். 

சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்துவது அனைவரின் கடமை என தெரிவித்தார்.திடக்கழிவு மேலாண்மை விதிகள்–2026 மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி, குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாக தரம் பிரித்து வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பது பொதுமக்களின் பொறுப்பு என விளக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து,சமையலறை கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள் உள்ளிட்ட ஈரக் கழிவுகள் முதல் வகையாகவும், காகிதம், பிளாஸ்டிக், டின் கேன்கள் போன்ற உலர் கழிவுகள் இரண்டாவது வகையாகவும், மாதவிடாய் துணிகள், டைப்பர்கள், பயன்படுத்தப்பட்ட மாஸ்க்கள் போன்ற சுகாதாரக் கழிவுகள் மூன்றாவது வகையாகவும், மின்னணு சாதனங்கள், பேட்டரிகள், மின்விளக்குகள், உடைந்த கண்ணாடிகள் உள்ளிட்டவை நான்காவது வகையாகவும் பிரித்து வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தூய்மை இந்தியா (நகர்ப்புற) 2.0 திட்டத்தின் கீழ், தோற்ற நிலையிலேயே கழிவுகளை பிரித்தல், சேகரிப்பு, செயலாக்கம் மற்றும் பழைய கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த ஜூன் 8 முதல் பேரணி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 5 அடி உயரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை சாலையோரங்கள், நீர்நிலைகள் மற்றும் பள்ளி வளாகங்களில் நட்டு, அவற்றை பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வரும் ஜூன் 12 வரை தொடர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் டாக்டர் ராம்குமார், மாமன்ற உறுப்பினர்கள் வெ. தெய்வலிங்கம், திருநா. யாதவமூர்த்தி, திருமா. திருஞானம், சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.