ட்ரெண்டிங்

சேலத்தில் சாலையில் ரயில் ஓட்டும் வகையில் நூதன ஆர்ப்பாட்டம் !

 

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கி அருகில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தலையில் ஹெல்மெட் அணிந்து, சாலையில் வரிசையாக நின்று ரயில் ஓட்டும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள், கடந்த ஒரு மாதத்தில் பல முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர். 

மேலும், சமையல் எரிவாயு மற்றும் வர்த்தக சிலிண்டர்களின் விலை உயர்வு காரணமாக உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.கச்சா எண்ணெய் விலை உயரும்போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதாகவும், ஆனால் கச்சா எண்ணெய் விலை குறையும்போது அதற்கேற்ப விலை குறைக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.எனவே, பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உடனடியாக குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு மாநகர தலைவர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் மனோகரன், நிர்வாகிகள் நாகராஜ், முத்துக்குமரன், ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் மாவட்ட செயலாளர் பிரவீன் குமார் கண்டன உரையாற்றினார்