ட்ரெண்டிங்

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் !

 

சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை அழகிரிநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி நடைபெற்ற திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா... கோவிந்தா..." என பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து வழிபட்டனர்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே திருமணிமுத்தாற்றின் கரையோரத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அழகிரிநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழா பக்தர்களிடையே சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா நாட்களில் தினமும் காலை நேரங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதருக்கு பல்வேறு வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும், தினசரி மாலை நேரங்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அழகிரிநாதர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் சுவாமி உற்சவர் சிலைகள் ஊர்வலமாக தேர்வீதியில் நிறுத்தப்பட்டிருந்த திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டு எழுந்தருளச் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர்வீதியில் தொடங்கிய தேரோட்டம் இரண்டாவது அக்ரஹாரம், பட்டைக்கோவில், சின்னக்கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், முதல் அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தேர்வீதியை வந்தடைந்தது.

தேரோட்டத்தின் போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களின் பக்தி முழக்கத்தால் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகள் ஆன்மிக எழுச்சியுடன் காட்சியளித்தன.