ட்ரெண்டிங்

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி! 

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சேலம் அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (மார்ச் 19) நடைபெற்றது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டத்தில் 14,56,299 ஆண் வாக்காளர்கள், 14,71,524 பெண் வாக்காளர்கள் மற்றும் 299 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என ஆக மொத்தம் 29,28,122 வாக்காளர்கள் உள்ளனர். மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 100 சதவிகித வாக்குப்பதிவினை உறுதி செய்திடும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக. இன்றைய தினம் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சேலம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஓவியப் போட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், மனித சங்கிலி பேரணி ஆகியவற்றைத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், 800- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல், மாவட்டம் முழுவதும் வாக்காளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்குப்பதிவு நாளன்று கட்டாயம் வாக்களித்து ஜனநாயக கடமையை 100 சதவீதம் நிறைவேற்றிட முன் வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.