ட்ரெண்டிங்

சரபங்கா வடிநில ஏரி திட்டத்தை நிறைவேற்றுக- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்! 

சரபங்கா வடிநில ஏரிகளை நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது தலைமையிலான ஜெயலலிதாவின் அரசில் பல மக்கள் நலத் திட்டங்கள் துவக்கப்பட்டது. மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை கடந்தவுடன் வெளியேற்றப்படும் உபரி நீர் கடலில் கலந்து வீணாகும். அச்சமயத்தில் மேட்டூர் அணைக்கு வரும் மழைக்கால வெள்ள உபரி நீரை, நீரேற்றுப் பாசனம் மூலம் சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தை சுமார் ரூபாய் 565 கோடி மதிப்பில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டு, கடந்த 2020- ஆம் ஆண்டு மார்ச் 04- ஆம் தேதி அன்று நான் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தேன்.

மேட்டூர் அணைக்கு வரும் மழைக்கால வெள்ள உபரி நீர், திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்தில் மின் மோட்டார்கள் மூலம் நீரேற்றம் செய்யப்பட்டு, 12 கி.மீ. தூரத்தில் உள்ள எம். காளிப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டும், வெள்ளாளபுரம் மற்றும் கன்னந்தேரியில் அமைக்கப்படும் துணை நீரேற்று நிலையங்களில் இருந்து மின் மோட்டார்கள் மூலம் குழாய்கள் வழியாகவும், 9 ஒன்றியங்களில் உள்ள
12 பொதுப்பணித் துறை ஏரிகள், 88 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் குட்டைகள் என மொத்தம் 100 ஏரிகள் நிரம்பி சுமார் 4,300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், 100 ஏரிகளைச் சுற்றியுள்ள சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆயிரக்கணக்கான கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் நீர் செறிவு பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. இதனால், இப்பகுதியில் விவசாயம், குடிநீர் மற்றும் கால்நடை வளர்ப்பு மேம்படும்.

இத்திட்டத்தின் முதற்கட்ட வேலைகள் முடிவடைந்து, திப்பம்பட்டி பிரதான நிலையத்தில் இருந்து நீரேற்று முறையில் குழாய்கள் மூலம் 6 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் பணிகளை கடந்த 2021- ஆம் ஆண்டு பிப்ரவரி 27- ஆம் தேதி அன்று நான் துவக்கி வைத்தேன். ஆனால், விடியா தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து 38 மாதங்கள் முடிவடைந்த நிலையில், இத்திட்டத்தின் மீதமுள்ள பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. தற்போது மேட்டூர் அணை 120 அடியை விரைவில் எட்டக்கூடிய நிலையில், அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் வீணாகக் கடலில் கலக்கும் அவலத்தை இந்த விடியா திமுக அரசு ஏற்படுத்தியுள்ளதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனியாவது, வறண்ட பகுதிகளுக்கு பாசன வசதியை அளிக்கும் சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் முடிக்க இந்த விடியா தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.