தமிழகம் முழுவதும் அனுமதியுள்ள - அனுமதியில்லா குவாரிகள் விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் சேலம் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை..
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்தில் அனுமதி பெற்ற மற்றும் அனுமதி இல்லாத குவாரிகள் குறித்த முழு விவரங்களையும் தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது கனிமவளத்துறை அமைச்சரின் செயல்பாடுகள் வரவேற்கத்தக்க வகையில் உள்ளதாகவும், இருப்பினும் தமிழகத்தில் செயல்படும் அனுமதியுள்ள மற்றும் அனுமதியில்லாத குவாரிகள் பற்றிய முழுமையான தகவல்களை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அவ்வாறு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டால், அனுமதி பெற்ற கல்குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து ஜிஎஸ்டி செலுத்தி சட்டபூர்வமாக மணல் எடுத்து வரும் லாரி உரிமையாளர்களுக்கு எந்தவித சிரமமும் இருக்காது என்றார். ஆனால் சட்டப்படி மணல் எடுத்துச் செல்லும் வாகனங்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதுகுறித்து அமைச்சர் நேரடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு உடனடியாக புதிய மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அண்டை மாநிலங்களுக்கு 12 மற்றும் 14 சக்கர கனரக வாகனங்களில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், இதனை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனுடன், கடந்த 15 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


