ட்ரெண்டிங்

ஏற்காட்டிற்கு மகுடம் சூட்டிய தங்க மங்கை!

சேலம் மாவட்டம், ஏற்காடு, குண்டூர் மலைக் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சுந்தரம்- ஜானகி தம்பதியின் மகள் அனுஷ்கா (14). இவர் ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். யுனிட்டி ஆப் யூத் நிறுவனம் மூலம் மாணவி அனுஷ்கா, தீவிர சிலம்பம் பயிற்சியைப் பெற்றார். 

பயிற்சிக்கு பின் முதன்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் கோவையில் நடைபெற்ற மாநில சிலம்பப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்து அசத்தினார். அதைத் தொடர்ந்து, மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் தனி, குழு ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி 3 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தினார். 

இன்று (நவ.28) சொந்த ஊர் திருமபிய தங்க மங்கைக்கு ஏற்காடு மலை கிராம மக்கள், மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும், ஊர்வலமாக அழைத்துச் சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களின் வரவேற்பில் நெகிழ்ந்த மாணவி, மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். 

மேலும் அனுஷ்காவின் இந்த திறமையை வெளிப்படுத்தி இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த யுனிட்டி ஆப் யூத் பவுண்டேஷன் நிறுவனத்தின் நிறுவனர் விஜய், காருண்யா மற்றும் சிலம்பம் மாஸ்டர் கிருஷ்ணன், கோகுல், ஷபானா ஆகியோருக்கும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

3 தங்கப் பதக்கங்களை வென்ற மலைவாழ் மாணவி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.