ட்ரெண்டிங்

சேலம் அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் !

 

பாரம்பரிய கலைகளில் இலவச பயிற்சி – மாதம் ₹1000 உதவித்தொகை வழங்கல்

சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2026-27 கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர்.இளம்பகவத், இ.ஆ.ப., அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் இப்பள்ளி, சேலம் தளவாய்பட்டி – திருப்பதி கவுண்டனூர் சாலையில் அமைந்துள்ளது. 

இங்கு தமிழர்களின் பாரம்பரிய கலைகளான குரலிசை (பாட்டு), நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சேர தகுதியுடையவர்கள். பயிற்சி காலம் 3 ஆண்டுகள் ஆகும். பயிற்சி நிறைவில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. ஆண்டிற்கு ரூ.350 மட்டும் சேர்க்கைக் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், பயிலும் மாணவ மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

சேர்க்கை விண்ணப்பங்களை தலைமையாசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, ஆவின் பால்பண்ணை எதிரில், தளவாய்பட்டி – திருப்பதி கவுண்டனூர் சாலை, அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம் – 636302 என்ற முகவரியில் நேரிலோ அல்லது சுயமுகவரியிட்ட அஞ்சல் உறையுடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 0427-2906197, 9600275911, 9443539772 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை கற்றுத் திறன் வளர்த்துக்கொள்ள இந்த அரிய வாய்ப்பை சேலம் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.