சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன்மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த பகுதியை வனத்துறையினர் சுற்றுலாத் தலமாகப் பராமரித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் வசதி, வனப்பகுதியில் பொழுதுப்போக்கும் வகையில் குடில், பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு செல்ல தார்ச்சாலை மற்றும் பூங்காவில் ஜல்லிக்கட்டு காளை, மான், யானை உள்ளிட்ட சிலைகள் கண்களை கவரும் வகையில் அமைப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதால் ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கல்வராயன்மலை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் கல்வராயன்மலை நீரோடை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன்காரணமாக இன்று முதல் மறுஉத்தரவு வரும் வரை ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர், மேலும் அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்யவும், பூங்காவை சுற்றிப்பார்க்கவும் அனுமதி வழங்கியுள்ளனர்.


