பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், இல்லையெனில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழக விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பெரியண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தபோது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.
தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழுமையான பயிர் கடன் தள்ளுபடியும், ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலை விவசாயிகளுக்கு செய்யப்படும் துரோகமாக உள்ளது.
எனவே தேர்தல் வாக்குறுதிப்படி பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய அரசு முன்வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே விவசாயிகளின் ஆதரவு கிடைக்கும். இல்லையெனில் வருங்காலங்களில் மிகப்பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
இந்த ஆண்டே பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அடுத்த ஐந்து ஆண்டுகளும் அதனை செய்ய தேவையில்லை. ஏற்கனவே தமிழக அரசுக்கு ரூ.12 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். செய்வது ஒன்று, சொல்வது ஒன்று என்ற நிலைப்பாட்டில் அரசு செயல்படுகிறது.
கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படாததால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது கூட பயிர் கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் விரைவில் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்.
விவசாய பொருட்களுக்கு உரிய விற்பனை விலை கிடைப்பதில்லை. விவசாய வேலைகளுக்கு தொழிலாளர்களும் கிடைப்பதில்லை. விவசாயம் அழியாமல் பாதுகாக்க வேண்டுமெனில் தொழிலாளர்கள் மீண்டும் விவசாயத் துறைக்கு வர வழிவகை செய்ய வேண்டும்.
ஜூன் 12-ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படாவிட்டால் பஞ்ச நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. டெல்டா மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது.
மேலும், கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அமைச்சர்களுக்கு அனுபவத்தை விட புத்திசாலித்தனமும், அதிகாரிகளின் சரியான வழிகாட்டுதலும் அவசியம்.கடந்த ஆட்சிகளில் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய அரசு விவசாயிகளை முழுமையாக வஞ்சித்து வருகிறது என்று தெரிவித்தார்.


