சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி ஆறுமுக ஐயர் தெருவில் மாற்றுத்திறனாளி பேத்தியை கொலை செய்துவிட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியை சேர்ந்த ராஜாவின் மகள் சதாசினி இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி ஆவார். அவரை ராஜாவின் தாய் அம்மணி பல ஆண்டுகளாக பராமரித்து வந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக பேத்தியை தொடர்ந்து கவனிக்க முடியாத நிலையும், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகன் தனக்குப் பிறகு பேத்தியை சரியாக பார்த்துக் கொள்ள மாட்டார் என்ற அச்சமும் அம்மணிக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிகாலை டீ குடிக்க வெளியே சென்றிருந்த நேரத்தில், பேத்தி சதாசினியை தூக்கிட்டு கொலை செய்துவிட்டு அம்மணியும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். காலை வீட்டிற்கு திரும்பிய ராஜா, இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவலறிந்து வந்த கன்னங்குறிச்சி காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



