ட்ரெண்டிங்

சேலம் அருகே டாஸ்மாக் கடை மூட கோரி பெண்கள் மனு !

 

சேலம் அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி விதவை கோலத்தில் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சேலம் சூரமங்கலம் அருகே இரும்பாலை செல்லும் சாலையில் புதுரோடு பகுதியில் பள்ளிகள், கோவில்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகில் டாஸ்மாக் மதுபான கடைகள் எண் 7237, 7123, 7112 ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை அகற்றக்கோரி புதுரோடு பகுதியைச் சேர்ந்த விதவை கோலத்தில் பெண்கள் சிலர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில், இந்த டாஸ்மாக் கடைகளால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், கோவில்களுக்கு செல்லும் இல்லத்தரசிகள் உள்ளிட்டோர் நாள்தோறும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், கனரக வாகனங்கள் அதிகமாகச் செல்லும் சாலையில் மது அருந்தியவர்கள் சாலை கடக்க முற்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.ஏற்கனவே 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசு சமீபத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில், இந்த மூன்று கடைகளும் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்றும், எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவர் கூறுகையில், எங்கள் பகுதியில் பெரும்பாலும் அன்றாட கூலி வேலை செய்யும் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மூன்று டாஸ்மாக் கடைகளால் இளைஞர்கள் மற்றும் குடும்பத் தலைவர்கள் மது அருந்தி வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். வீட்டு செலவுகளுக்கும், குழந்தைகளின் கல்வி கட்டணங்களுக்கும் பணம் செலவிடாமல் மது பழக்கத்தில் மூழ்குவதால் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் இளம் வயதிலேயே பெண்கள் விதவையாகும் நிலை உருவாகியுள்ளது. எனவே இந்த கடைகளை உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.