சுற்றுலா

ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் !

 

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமான ஏற்காடு பகுதியில் நடைபெற்று வரும் 49வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை முன்னிட்டு, இன்று மலைப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த 22ஆம் தேதி தொடங்கிய கோடை விழாவை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக இன்று வாகனங்களின் வரத்து அதிகரித்தது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் அடிவாரம் முதலே கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை நீண்ட வரிசையில் அணிவகுத்து மெதுவாக நகரும் நிலை ஏற்பட்டது.

குறிப்பாக, மலை அடிவாரத்தில் உள்ள சுங்கச்சாவடியில் போதிய ஊழியர்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. அதிகளவு வாகனங்கள் வந்த போதிலும், இரண்டு பேர் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சுங்கச்சாவடியில் வாகனங்கள் தேங்கியதுடன், அதன் எதிரொலியாக முழு மலைப்பாதையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்