சேலம் வ.உ.சி மார்க்கெட்டில் உள்ள கடைகள் தொடர்பாக புதிய அரசு ஏலம் நடத்தி, கடைகளை நேரடியாக வியாபாரிகளுக்கே வழங்க வேண்டும் என்று கோரி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வ.உ.சி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், கடந்த சில ஆண்டுகளாக மார்க்கெட் கடைகள் ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பழைய வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும், வாடகை மற்றும் ஒப்பந்த முறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மார்க்கெட்டில் சுமார் 75 ஆண்டுகளாக தொழில் செய்து வரும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதால், அரசு நேரடியாக புதிய ஏலம் நடத்தி உண்மையான வியாபாரிகளுக்கே கடைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வியாபாரிகள் ஒன்றிணைந்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் பலர் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.



