ட்ரெண்டிங்

சேலம் தட்டுவடை செட்டுக்கு 2-ம் இடம்!

சேலம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடியாக மொத்த கொள்முதல் செய்பவர்களிடம் விற்பனை செய்யும் வகையில் வாங்குவோர், விற்பனையாளர் சந்திப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (மார்ச் 26) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர், மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறார்கள். மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள், தங்களது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துதலுக்காக பல்வேறு சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம், சேலம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடியாக மொத்த கொள்முதல் செய்பவர்களிடம் விற்பனை செய்யும் வகையில் மாவட்ட அளவில் வாங்குவோர் மற்றும் விற்பனை செய்வோர் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படுகிறது. 

இக்கூட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்திடும் பல்வேறு வகையான தயாரிப்புகளுக்கு தற்போது விற்பனை செய்து வரும் முறை, நுகர்வோர்களிடையே நிலவும் தேவை மற்றும் போட்டியாளர்கள் குறித்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக, உலகளவிலான சந்தைகளில் போட்டி போடும் அளவிற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களால் தரமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் அனைத்து விதமான பொருட்களுக்கும் விற்பனை மேம்பாட்டிற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று கடந்த ஆண்டு டிசம்பர் 27- ஆம் தேதி முதல் ஜனவரி 12- ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிர் சுய உதவிக்குழு விற்பனை பொருட்கள் கண்காட்சியில் சேலம் மாவட்டத்தின் அடையாளமாக திகழும் தட்டுவடை தயாரிப்பில் சிறந்து விளங்குவதற்காக கொளத்தூர் துளசி மகளிர் சுய உதவிக்குழுவிற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் பாராட்டி 2-ஆம் இடத்திற்கான பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

மேலும், சேலம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொம்மைகள் தனித்தன்மை கொண்டது. அதேபோன்று நுகர்வோரின் விருப்பத்திற்கேற்ப பாய், புடவைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை செய்து கொடுக்கும் ஆற்றல் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு உண்டு. இன்றைய தினம் நடைபெற்ற வாங்குவோர் விற்பனை செய்வோர் சந்திப்பு கூட்டத்தில் 90- க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களின் 104 விற்பனை பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு வாங்குவோர், விற்பனை செய்வோர் இடையே 40- க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.