தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூரில் இன்று (ஜூன் 16) நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சியின் வாயிலாக புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தினைத் தொடங்கி வைத்ததைத்தொடர்ந்து, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், புதிய விரிவான மினி பேருந்து சேவையினைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பள்ளிக் குழந்தைகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
அதேபோன்று, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக. இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய விரிவான மினி பஸ் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு வட்டத்திற்கு 22 மினி பேருந்துகள், சேலம் கிழக்கு வட்டத்திற்கு 18 மினி பேருந்துகள், சேலம் தெற்கு வட்டத்திற்கு 7 மினி பேருந்துகள், சங்ககிரி வட்டத்தில் 16 மினி பேருந்துகள், ஆத்தூர் வட்டத்திற்கு 32 மினி பேருந்துகள், மேட்டூர் வட்டத்திற்கு 16 மினி பேருந்து சேவைகள் என மொத்தம் 111 மினி பேருந்துகள் சேவை இன்று (ஜூன் 16) முதல் இயக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, கூட்டுறவுத்துறையில் பணியின்போது இயற்கை எய்தியவர்களின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், உதவி ஆட்சியர் (பயிற்சி) விவேக் யாதவ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தாமோதரன், கோகிலா, தியாகராஜன், ராஜபாண்டியன், வேலுமணி, செந்தில்ராம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



