பாதுகாப்பு பணியில் இருந்த 2 வார்டன்கள் சஸ்பெண்ட்.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆயுள் கைதி தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு சிறை வார்டன்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது உசேன் (28) என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்பட்டதால், கடந்த மாதம் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
உடல்நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையின் என்.எம். வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரவு நேரத்தில் கழிவறைக்கு சென்ற முகமது உசேன் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த வார்டன்கள் கழிவறை கதவை உடைத்து பார்த்தபோது, ஜன்னல் வழியாக கைதி தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை மற்றும் சிறை நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது.
சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சேலம் மத்திய சிறை எஸ்.பி. வினோத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பிய கைதியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் அலட்சியம் காட்டியதாக கூறி பாதுகாப்பு பணியில் இருந்த வார்டன்கள் வெங்கடேஷ்வரன் மற்றும் ஷாஜகான் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

-9KHMHFWlIP.jpeg )

