ட்ரெண்டிங்

புகையில்லா போகி- நூதன முறையில் விழிப்புணர்வு!

 

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, நாம் அனைவரும் வீடுகளை சுத்தம் செய்து தேவையற்ற பொருட்களை அகற்றுவது அதனை பொது இடங்களில் எரிப்பது என்ற செய்யக்கூடாத செயல்கள் இன்னும் போகி பண்டிகையின் போது சில இடங்களில் நடந்து வருகின்றது.

பெருகிவரும் மக்கள் தொகை.. வாகனங்களின் ஆதிக்கம்.. நகரமயமாக்கல்.. தொழில் வளர்ச்சி.. பொருளாதார வளர்ச்சி..போன்ற பல்வேறு காரணங்களால் நகர்ப்புறங்களில் காற்றின் தரம் மற்றும் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மாசடைவது அதிகரித்து வருவது மிகவும் வேதனைக்குரியது.

இயற்கை வளங்கள் நம் மூதாதையர் நமக்குத் தந்த சொத்து என்று கருகாமல் எதிர்கால தலைமுறைக்கு நாம் திருப்பித் தர வேண்டிய கடன் என்று கருதி இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொருட்டு, எனவே நம் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியப் பொருட்களை போகி என்று போட்டு எரிக்காமல்,  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பழையனவற்றை முறையாக அகற்றி நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களிலும் வீசி எறியாமல் தங்கள் பகுதிக்கு வரும் மாநகராட்சி சிறப்பு தூய்மை வாகனங்களில் வழங்கி இயற்கையை மாசு படுத்தாமல் புகையில்லா போகி திருநாளை கொண்டாடி மகிழ்ந்திட
வேண்டி, சேலம் மாநகராட்சி 34- வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ தலைமையில் இன்று (ஜன.11) ஈசன் காம்ப்ளக்ஸ் அருகில் இருந்து புகையில்லா போகி பேரணி துவங்கி வார்டு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோருடன் மாட்டு வண்டியில் பயணித்தவாறு 
சென்ற மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ, போகி அன்று குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தொடர்ந்து போகி திருவிழாவால் ஏற்படும் புகை மாசுவைத் தடுக்க 34- வது வார்டில் உள்ள அய்யாசாமி பசுமை பூங்கா முன்பு இன்று முதல் ஜன.14 வரை செயல்பட உள்ள வீட்டில் உள்ள பழைய மற்றும் கழிவு பொருட்களை பெறும் மையத்தையும் துவக்கி வைத்தார்.