தமிழகத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு பல மாவட்டங்களில் கல்வி வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. அதில், சேலம் மாவட்டம் மீண்டும் தனது கல்வி திறமையை நிரூபித்து கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் பெற்றுள்ள சாதனைகள் மற்றும் சிறைக் கைதிகளின் வெற்றி என பல்வேறு அம்சங்கள் இந்த ஆண்டு சேலத்தின் கல்வி பயணத்தை ஆச்சரியப்பட வைத்துள்ளன.
இந்த ஆண்டு சேலம் மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் சேர்த்து 316 கல்வி நிறுவனங்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்று குறிப்பிடத்தக்க சாதனையை பதிவு செய்துள்ளன. இதில் 105 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளன. அதிலும் 23 அரசு பள்ளிகள் முழு தேர்ச்சியை பதிவு செய்திருப்பது கல்வித்துறையில் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் 36,572 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதிய நிலையில், 35,334 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் சேலம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 96.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநில அளவில் சேலம் மாவட்டம் 14வது இடத்தை பிடித்திருப்பதும் கல்வியாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதிய 11,502 மாணவிகளில் 11,132 பேர் தேர்ச்சி பெற்று 96.78 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளனர். மாணவர்கள் பிரிவில் 8,716 பேரில் 8,135 பேர் தேர்ச்சி பெற்று 93.33 சதவீத தேர்ச்சி விகிதம் கிடைத்துள்ளது. கல்வியில் பெண்கள் தொடர்ந்து முன்னிலை வகிப்பது சமூக முன்னேற்றத்தின் நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற பிளஸ் 2 தேர்விலும் மாணவிகளே அதிக அளவில் சாதித்துள்ளனர். மாநில அளவில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97 சதவீதமாக இருந்த நிலையில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.19 சதவீதமாக பதிவாகியுள்ளது. மொத்தமாக சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7.53 லட்சம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். மாநிலத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.58 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சேலம் மத்திய சிறையிலும் கல்வி சாதனை நிகழ்ந்துள்ளது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 21 கைதிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளனர். இதில் சண்முக பிரபு 480 மதிப்பெண்களுடன் முதலிடமும், தமிழரசன் 478 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், கலையரசன் 468 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
சிறைவாசிகளின் இந்த முயற்சி, கல்வி ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய சக்தி என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது. இந்த ஆண்டு சேலம் மாவட்டத்தின் தேர்வு முடிவுகள், அரசு பள்ளிகளின் வளர்ச்சியையும் மாணவர்களின் கடின உழைப்பையும் பெருமையாக வெளிப்படுத்தியுள்ளன.



-SXgDfGgJfO.jpg)