சேலம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தபால் வாக்கு வழங்கும் போது திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.
நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேலம் கோட்டத்தில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்களுக்கு தபால் வாக்கு படிவங்கள் வழங்கும் போது, குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் இவ்வாறு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பிருந்தாதேவியிடம் மனு அளித்தனர். புகாரின் அடிப்படையில் போக்குவரத்து கழக அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்திய தேர்தல் அதிகாரி, ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட தபால் வாக்கு படிவங்களை திரும்ப பெற உத்தரவிட்டார்.
மேலும், தேர்தல் நாளில் பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமே தபால் வாக்கு வழங்க வேண்டும் என்றும், எந்த வித நெருக்கடியும் இல்லாமல் ஊழியர்கள் சுதந்திரமாக வாக்களிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-RPJlLnzh1O.jpg )
