சேலம் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பின், வரும் டிசம்பர் 31- ம் தேதிக்குள் விண்ணப்பித்து பெயருடன் கூடிய சான்றிதழினை இணைய வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகவும், முக்கிய ஆவணமாகவும் பிறப்பு சான்றிதழ் உள்ளதனால், அனைவரும் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்திருப்பதனை உறுதி செய்து கொள்ளுமாறு சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான சான்று ஆகும். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்ய வேண்டியது அவசியம். ஒரு குழந்தையின் பிறப்பு பெயர் இன்றிதான் பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் குழந்தையின் பெற்றோர்கள் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எந்தவித கட்டணமுன்றி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு வருடத்திற்கு பின்னர் குழந்தையின் பெயரை பதிவு செய்திட வேண்டுமெனில், காலதாமதக் கட்டணமாக ரூபாய் 200 சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவு விதிகளின்படி 2000- ம் ஆண்டு ஜனவரி 1- ம் தேதிக்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கு. 2014- ம் ஆண்டு டிசம்பர் 31- ம் தேதி வரை பெயர் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது. 2014- ம் ஆண்டு இந்த கால அளவு 2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனினும் மக்கள் பலரும் பெயரை பதிவு செய்ய சிரமப்பட்டதால் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. டிசம்பர் 31-ம் ஆண்டுக்கு பிறகு நீட்டிப்பு வழங்கிட இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பெயரினை பதிவு செய்யாதவர்கள், உடனடியாக மாநகராட்சி மைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பெயரினை பதிவு செய்து கொள்ளலாம். வரும் 31/12/2017 தேதி வரை பதிவு செய்யப்பட்ட பிறப்புக்கான சான்றிதழ்களை www.tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும், 01/01/2018 தேதிக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கான சான்றிதழை www.crstn.org என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.


