சேலம் அம்மாபேட்டை பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த கணவனை அம்மிக்கல்லால் அடித்துக் கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அம்மாபேட்டை வையாபுரி தெருவைச் சேர்ந்த தங்கம் (40) மற்றும் அவரது மனைவி பத்மா (40) காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். தங்கம் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த தங்கம், பத்மாவுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியதாக தகவல். பின்னர் தங்கம் தூங்கிய நிலையில் இருந்தபோது, நீண்டநாள் சித்திரவதையால் ஆத்திரமடைந்த பத்மா, வீட்டில் இருந்த அம்மிக்கல்லால் தலையில் அடித்துள்ளார். இதில் தங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பத்மாவை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-(8)-PLdiNr4Uiw.jpg )
