சேலம்:
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் தீவிர வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்தின் 11 சட்டமன்றத் தொகுதிகளில் 33 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட தாதகாப்பட்டி காவேரி மருத்துவமனை அருகே, கூட்டுறவு சார்பதிவாளர் உமா தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லைன்மேடு பகுதியில் இருந்து சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில், விஜயகுமார் என்பவர் ரூ.2 லட்சம் பணம் கொண்டு சென்றது கண்டறியப்பட்டது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ள முனியப்பன் முன்னிலையில் பணம் சீல் வைக்கப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து சேலத்தில் முதல்முறையாக ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.


