ட்ரெண்டிங்

மாணவர்களுக்கானஅரசு விடுதியில் அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று (செப்.26) இரவு சேலத்திற்கு வருகைத் தந்தார். அவருக்கு சேலம் மாவட்ட மத்திய தி.மு.க.வின் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

அதன் தொடர்ச்சியாக, சேலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, விடுதியில் உள்ள மாணவர்கள் தங்கும் அறை, படிக்கும் அறை, உணவுப் பொருட்கள் அறை, சமையல்கூடம், கழிவறை என ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு செய்தார். அப்போது, விடுதியில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிச் செய்ய அவற்றையும் ஆய்வுச் செய்தார்.

 

அதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு தரமான கல்வி வகுப்பறையில் கிடைப்பது போல, தரமான வாழ்விடம் விடுதியில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென அதிகாரிகள், அலுவலர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

இந்த ஆய்வின் போது, நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.