சினிமா

படையப்பா கதை மனம் திறந்த -ரஜினிகாந்த் !

 

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத் தில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம்,1999-ம் ஆண்டில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி (வருகிற 12-ந்தேதி) மீண்டும் ரிலீஸ் ஆகிறது.

படையப்பா படம் குறித்து ரஜினிகாந்த் மனம் திறந்துள்ளார்.ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் ரஜினிகாந்த் பேசியதாவது ;

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் வரும் நந்தினி கதாபாத்திரம் என்னை ஈர்த்த ஒன்று.அந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு கதையை எடுக்க முடிவு செய்தேன்.அந்தவகையில் 3 ஆண்டுகளாக என் மனதில் ஓடிய கதைதான் படையப்பா.இந்த கதையை கே.எஸ்.ரவிகுமாரிடம் சொன்னேன்.திரைக்கதை, வசனம் எழுத உடனடியாக ஓகே சொன்னார்.உடனே என் மனதில் படையப்பா என்று தலைப்பு வந்தது. இதுவரைக்கும் அந்த பெயரை கேள்விபட்டதே கிடையாது. சில நேரங்களில் அப் படி தோன்றும். என் பெரும்பாலான படங்களுக்கு நான் தான் தலைப்பு சூட்டியுள்ளேன்.அண்ணா மலை,பாட்ஷா,வீரா,முத்து எல்லாமே இப்படித் தான்.படையப்பா பெயரை கேட்டதும்,நல்லா இருக்கு.ஆனா கொஞ்சம் பழசா இருக்கே என்றார் கே.எஸ்.ரவிகுமார்.நல்லா இருக்கு,வையுங்க என்றேன்.அப்படித்தான் தலைப்பு ஓகே ஆனது.நீலாம்பரி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் தான் நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். 2 வருடங்கள் காத்திருக்கவும் தயாராக இருந்தேன்.ஒருகட்டத்தில் அவருக்கு இஷ்டம் இல்லை என்று உணர்ந்தேன்.அதன்பிறகு ஸ்ரீதேவி,மீனா,மாதுரிதீட்சித் சரியாக இருப்பார்கள் என்று சொன்னார்கள்.ஆனால் அவர்கள் கண்களில் நான் தேடிய அந்த ஆணவம், திமிர் இல்லை என்பதால் தவிர்த்து விட்டேன்.அதன்பிறகு கே.எஸ்.ரவிகுமார் சொல்லி ரம்யாகிருஷ்ணனை பார்த்தேன்.மிரண்டு போனேன்.எனது அப்பா கதாபாத்திரத்தில் சிவாஜி நடிக்க வேண்டும் என்றேன்.கே.எஸ்.ரவிகுமார் சிவாஜியிடம் போய் கேட்டுவிட்டு, நடிக்க ஓகே சொல்லி விட்டார்.ஆனால் சம்பளம் இவ்வளவு கேட்கிறாரே,என்று சொன்னார்.அவர் ஓகே சொன்னதே போதும் என்று,கேட்ட சம்பளத்தை முழுதாக கொடுத்து சம்மதம் பெற்றேன்.அதன்பிறகு லட்சுமி, சவுந்தர்யா,மணிவண்ணன் என கேட்ட அத்தனை பேரும் உடனடியாக அமைந்தார்கள்.அப்படி அமைந்ததுதான் படையப்பா.

சம்பாதிக்கும் வயதில் இமயமலை என்று ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறானே... என என் மகன்களிடம் உன்னை சொல்லி திட்டியுள்ளேன். ஆனால் நீ செய்வதுதான் சரி.ஏனெனில் படவாய்ப்புகள் இல்லாமல் நானே மன உளைச்சல் அடைந்த நாட்கள் உண்டு என்றார் சிவாஜி.திடீரென நான் இறந்துவிட்டால், என் உடலுடன் மயானம் வரை வருவாயா என்றார்.கண்டிப்பாக வருவேன் என்றேன்.அதன்படியே அவரது இறுதி ஊர்வலத்தின்போது, அவரது உடல் இருந்த வாகனத்திலேயே மயானம் வரை சென்றேன்.எந்த இறந்த உடலுடனும் நான் அப்படி இதுவரை சென்றது கிடையாது. 

அதேபோல திறமையான கலைஞர்களான சவுந்தர்யா,மணிவண்ணன் போன்றோர் நம்முடன் இல்லை. இன்னும் சில தொழில் நுட்ப கலைஞர்களும் நம்முடன் இல்லை.அவர்களுக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன். இந்த படம் என் கலைப்பயணத்தின் 25-வது ஆண்டில் தயாரித்து வெளியிட்டேன்.இந்த படத்தை இது வரை ஓ.டி.டி. தளம் உள்பட யாருக்குமே தரவில்லை.இதுபோன்ற படத்தை தியேட்டர்களில் பார்ப்பதுதான் கொண்டாட்டம். அந்தவகையில் எனது கலைப்பயணத்தின் 50-வது ஆண்டில், எனது பிறந்தநாளில் (வருகிற 12-ந்தேதி) படையப்பா படம் மீண்டும் ரிலீசுக்கு வருகிறது.பார்த்து மகிழுங்கள்,என ரஜினிகாந்த் பேசியுள்ளார்.