ட்ரெண்டிங்

சேலம் 14,கிலோ கஞ்சா பறிமுதல் கல்லூரி மாணவர் கைது !!!

 

சேலம் வழியாக கேரளாவுக்கு சென்ற ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக கோவை கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

மேற்குவங்க மாநிலம் ஹவு ராவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தது.அப்போது ரெயில்வே போலீசார் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர்,அதில் சோதனை செய்தனர்.அப்போது, ரெயிலின் ஒரு பெட்டியில் உள்ள கழிவறை அருகில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது.இதையடுத்து அதனை எடுத்து போலீசார் சோதனை செய்தபோது,அதில் 12கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.பின்னர் அவற்றை போலீசார் கைப்பற்றி கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.போலீசார் சோதனை செய்வதை அறிந்த மர்ம நபர்கள் கஞ்சா பொட்டலத்தைவைத்துவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.இருப்பினும் கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அதே ரெயிலில் மற்றொரு பெட்டியில் சந்தேகத்தின் பேரில் ஒரு வாலிபரை போலீசார் விசாரித்தனர்.அப்போது,அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது.

விசாரணையில்,அவர் ஊட்டியை சேர்ந்த கணபதி என்பதும்,இவர்,கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.படித்து வருவதும்,தனது பயன்பாட்டிற்காக ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கும், மற்றொரு பெட்டியில் கிடந்த 12 கிலோ கஞ்சாவுக்கும் தொடர்பு இருக்கிறதா,என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.