ட்ரெண்டிங்

பெண்கள் விடுதி, கலைஞர் ஆய்வு மையக் கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர்!

 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜன.23) காலை 10.00 மணிக்கு உயர்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 96 கோடியே 75 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், கலையரங்கம், விருந்தினர் மாளிகை, உடற்பயிற்சிக்கூடம், அணுகுசாலை, விடுதிகள், பணிமனைகள், கழிவறை தொகுதிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டடம் போன்ற பல்வேறு கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

 

அந்த வகையில், சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் 8 கோடியே 65 லட்சத்து 98 ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பெண்கள் விடுதிக் கட்டடம், பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் ஆய்வு மையக் கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். 

 

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக் இ.ஆ.ப., தொழில் நுட்பக்கல்வி ஆணையர் வீர ராகவ ராவ் இ.ஆ.ப., கல்லூரி கல்வி இயக்குநர் (மு.கூ.பொ) முனைவர் கீதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்