சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி,இன்று (அக்.14) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், பள்ளிகள் உட்கட்டமைப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.21242 கோடி மதிப்பீட்டிலான 5,862 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 5.207 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 655 பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், இன்றையதினம் அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம், வீராணம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.130 இலட்சம் மதிப்பீட்டில் வீராணம் நூலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளதையும், சின்னனூர் ஊராட்சியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருவதையும், தைலானூர் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.29.97 இலட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதையும், வலசையூர் ஊராட்சியில் ரூ.4.83 இலட்சம் மதிப்பீட்டில் சிறிய பொது சேவை மையம் கட்டப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், எம்.தாதனூர் ஊராட்சியில் பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தின் மூலம் ரூ.240 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு, சின்னக்கவுண்டாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.5.58 இலட்சம் மதிப்பீட்டில் 10,000 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நாற்றங்கால் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதையும், சின்னக்கவுண்டாபுரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டினையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோன்று மாசிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.9.38 இலட்சம் மதிப்பீட்டில் கால்வாய் புதுப்பிக்கும் பணியினையும், மாசிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டினையும், உடையாப்பட்டி ஊராட்சியில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.240 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தரமாகவும். உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும், குடிநீர் தொடர்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துப் பணியாற்ற தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது உத்தரவிட்டுள்ளார்.


-SXgDfGgJfO.jpg)