ட்ரெண்டிங்

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

 

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலாவினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இன்று (மார்ச் 11) மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி வைத்தார். 

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசால் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கிராமப்புறங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் உதவித்திட்டங்கள் மற்றும் அவர்களுக்கான உரிமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திவிடும் வகையில் மாவட்ட அளவிலான தெருமுனை நாடகங்கள் நடத்திடும் வகையில் இன்றைய தினம் இந்நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் அரசின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும், இன்றையதினம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்வி சுற்றுலாச் செல்லும் வகையில் 5 வயதிற்குட்பட்ட 50 குழந்தைகளை இன்று ஒரு நாள் சுற்றுலாவாக ஏற்காடு படகு இல்லம், அண்ணா பூங்கா. பீக்கு பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவிடும் வகையில் இந்த சுற்றுலா துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.