தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி மாவட்டம்,முழுவதும் இனிப்பு, பலகாரங்கள் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதனையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அதிகாரிகள் பலகாரங்கள் தயாரிப்பு நிலையங்கள், பேக்கரி, இனிப்பு கடைகள் உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தி, தயாராகும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் நடைபெற்ற ஆய்வில், இனிப்பு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பால், நெய், மாவு, எண்ணெய், கலர் போன்ற மூலப்பொருட்களின் தரம் சரிபார்க்கப்பட்டது. மேலும், தயாரிப்புகள் நடைபெறும் இடங்களில் சுகாதார நிலை, பணியாளர்கள் அணியும் ஆடை, கை உறைகள், தயாரிப்புக்கூடம் சுத்தம் செய்வது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளும் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டன.
அதிகாரிகள் கூறியதாவது:
தீபாவளி பண்டிகை காலத்தில் மக்கள் பெருமளவில் இனிப்பு, பலகாரங்கள் வாங்கி உண்ணுகின்றனர். எனவே தரமற்ற பொருட்கள் வண்ணம் ஏற்றிய உணவுப் பொருட்கள் பொதுமக்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனைத் தடுக்கும் நோக்கில், அனைத்து உணவு தயாரிப்பு நிலையங்களும் உரிய உணவு பாதுகாப்புச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், எனவும் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் புதிதாகவும், தரமானவையாகவும் இருக்க வேண்டும்,எனவும்,பழைய எண்ணெய்கள் மீண்டும் பயன்படுத்தப்படக் கூடாது,என அறிவுறுத்தியதாக தெரிவித்தனர்.
மேலும், இனிப்பு தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சுத்தமான சூழலில், நல்ல தரமான பொருட்களை பயன்படுத்தி பலகாரங்கள் தயாரிக்குமாறு அதிகாரிகள் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
பொதுமக்களும் இனிப்புகள் வாங்கும் போது உணவு பாதுகாப்புச் சான்றிதழ் பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும், மேலும் வண்ணம், வாசனை, சுவை போன்றவற்றில் வேறுபாடு இருப்பதாக சந்தேகம் இருந்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறையிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் இந்த ஆய்வுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

-7ybYNEQSvV.jpeg )

-hcTFAGMRGb.jpg)