ட்ரெண்டிங்

கொளத்தூர் ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு! 

சேலம் மாவட்டம், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இன்று (ஏப்ரல் 08) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சேலம் மாவட்டம், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம். பள்ளிகள் உட்கட்டமைப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.130.35 கோடி மதிப்பீட்டிலான 3,141 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 2,359 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 782 பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அந்த வகையில், இன்றையதினம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், லக்கம்பட்டி ஊராட்சி, பெருமாள் கோவில் நத்தம் பகுதியில் ரூபாய் 3.67 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும், தேங்கல்பள்ளம் முதல் ஊர்நத்தம் வரை ரூபாய் 1.78 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் இலக்கம்பட்டி ஊராட்சி, ரங்கபோயன்காடு பகுதியில் 5.5 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுவரும் பேருந்து நிறுத்தம் மற்றும் சிங்கிரிப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 8.04 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது குறித்தும், அதேபோன்று தலா ரூபாய் 3.5 இலட்சம் மதிப்பீட்டில் ரங்கபோயன்காடு மற்றும் கும்பாரப்பட்டி, தாளவாடி கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டுவருவது குறித்தும், கிராமப்புற வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் கும்பாரப்பட்டி ஊராட்சியில் தலா ரூ.2.98 இலட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 5.73 லட்சம் மதிப்பீட்டில் கணபதி நகர் பகுதியில் பேவர் பிளாக் அமைக்கப்பட்டுவரும் பணிகள் குறித்தும், மூலக்காடு ஊராட்சியில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் தாளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூபாய் 10.16 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டடம் புனரமைக்கப்பட்டு வருவது குறித்தும், மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவின் தரம் குறித்து கேட்டறியப்பட்டது. அதேபோன்று, சாம்பள்ளி ஊராட்சியில் ரூபாய் 15.68 லட்சம் மதிப்பீட்டில் 50,000 நாற்றங்கால் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்றுவருவதை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தரமாகவும். உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், குடிநீர் தொடர்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துப் பணியாற்றிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.