புரட்டாசி சனிக்கிழமையன்று சேலத்தில் விற்பனை ஜோர்,
சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள், விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே நேரடி வர்த்தக தளமாக முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
இந்த சந்தைகளின் நோக்கம் – இடைத்தரகர்களை தவிர்த்து விவசாயிகளுக்கு நேரடி வருமானம் கிடைக்கச் செய்வதும், நுகர்வோருக்கு தரமான காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்கச் செய்வதுமாகும்.
புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையான நேற்று (அக்.04), சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 13 உழவர் சந்தைகளிலும் காலை முதலே மக்கள் கூட்டம் பெருகியது. குடும்பத்தினர்,பெண்கள் என அனைவரும் கூட்டம் கூட்டமாக சந்தைகளில் வந்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிச் சென்றனர்.
அன்றைய தினம் மொத்தமாக 315.10 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் மட்டும் ரூ.1.31 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்று மாவட்ட வேளாண் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விற்பனைக்கு மொத்தம் 75,143 நுகர்வோர்கள் வருகை தந்துள்ளனர்.
அவர்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து நேரடியாக தோட்டத்தில் விளைந்த பண்ணைப்பொருட்களை வாங்கிச் சென்றனர்.
அதிக விற்பனை நடைபெற்ற உழவர் சந்தைகளில் சேலம், ஆத்தூர், ஓமலூர், மேச்சேரி, சங்ககிரி, எடப்பாடி உள்ளிட்ட இடங்கள் முக்கிய பங்காற்றின.
மாவட்ட வேளாண் சந்தை நிர்வாகிகள் கூறுகையில்,
உழவர் சந்தைகள் வழியாக விவசாயிகள் இடைத்தரகர் இன்றி தங்கள் உற்பத்திகளை நேரடியாக விற்பனை செய்வதால், அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. நுகர்வோருக்கும் புதிய காய்கறிகள் குறைந்த விலையில் கிடைப்பதால், இரு தரப்பினரும் பயன் அடைகின்றனர்,என தெரிவித்தனர்.
ஒரே நாளில் ரூ.1.31 கோடி மதிப்பிலான காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையாகியிருப்பது, சேலம் மாவட்ட விவசாயிகளின் உற்பத்தி திறனையும் நுகர்வோரின் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறது. இது மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், விவசாயத் துறையின் நிலைத்தன்மைக்கும் பெரும் பங்காற்றி வருவதாக தெரிவித்தனர்.

-J2K68utfzP.jpg )
