ட்ரெண்டிங்

காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்.....13 மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த கடிதம்! 

காவிரியில் 1.45 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சேலம் உள்பட 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார். 

அதில், கர்நாடகாவின் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 1.45 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த நீரானது நாளை (ஜூலை 28) மாலை மேட்டூர் அணையை வந்தடையும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி கரையோரங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

சேலம், தருமபுரி, ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; கரையோரங்களில் யாரும் செல்ல வேண்டாம்; 

காவிரியில் குளிக்கவோ, படகு சவாரி செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது; உள்ளூர் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை  விடுக்க வேண்டும். பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆற்று பகுதிக்கு செல்ல அனுமதிக் கூடாது. காவிரி கரையில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் செல்பி புகைப்படங்களை எடுக்கக் கூடாது; உள்ளூர் அதிகாரிகள் தொடர்ந்து கரை பகுதிகளில் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.