ட்ரெண்டிங்

வரதட்சணைக் கொடுமை புகார்.... ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட பெண்ணின் உறவினர்கள்!

 

சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விஷ்ணுபிரியா (வயது 24). சங்ககிரியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 27) என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. பின்னர் விஷ்ணு பிரியாவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடிகொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்ற விஷ்ணு பிரியா, ஆணையாளர் விஜயகுமாரியை நேரில் சந்தித்து, கண்ணீர் மல்க ஒரு புகார் மனுவை அளித்தார். அப்போது தனக்கு நடந்த கொடுமை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். இதனை தொடர்ந்து அவரது மனு குறித்து விசாரணை நடத்த அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு ஆணையாளர் உத்தரவிட்டார்.

 

அதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவுச் செய்த அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர்,

விஷ்ணு பிரியாவின் கணவர் கார்த்திகேயன், மாமியார் உதய நித்யா, மாமனார் வெள்ளியங்கிரி, நாத்தனார் கார்த்திகா ஆகிய நான்கு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில், கணவரை கைது செய்யக்கோரி, விஷ்ணு பிரியா தனது உறவினர்களுடன் ,மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு திரண்டு முற்றுகையிட்டார். அப்போது, திடீரென மயங்கி விழுந்த விஷ்ணு பிரியா, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.