ட்ரெண்டிங்

"ஆரியர் வைத்துள்ள மாணவர்களின் கவனத்திற்கு"- பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஜெகந்நாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெரியார் பல்கலைக்கழக அனைத்துத் துறைகள், பெரியார் பல்கலைக்கழக மேற்படிப்பு ஆராய்ச்சி மையம், தருமபுரி ஆகியவற்றில் பயின்ற இளநிலை மற்றும் முதுநிலை மாணாக்கர்கள் அவர்களது படிப்புக்காலம் முடிந்து அதன் பின் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிலுவைதாள் வைத்துள்ள மாணாக்கர்கள் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பாடப்பிரிவில் நிலுவை வைத்துள்ள மாணாக்கர்கள், அவர்களது படிப்புக்காலம் முடிந்து அதன் பின் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிலுவைதாள் வைத்துள்ள மாணாக்கர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இதில் மாணாக்கர்கள் தாங்கள் பயின்ற பழைய பாடத்திட்டத்திலேயே நிலுவைத்தாள்களுக்குரிய தேர்வுகளை எழுதலாம். சிறப்புத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்கள் வழக்கமான தேர்வுக் கட்டணத்துடன் ஒறுப்புக் கட்டணமாக இளநிலை மற்றும் முதுநிலை மாணாக்கர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூபாய் 2,000 மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாணாக்கர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூபாய் 3,000 (முழு நேரம்), ரூபாய் 4,000 (பகுதி நேரம்) சேர்த்து செலுத்த வேண்டும். 

இச்சிறப்புத் தேர்வுக்கான விண்ணப்பத்தினை வரும் செப்டம்பர் 1- ஆம் தேதி முதல் www.periyaruniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து உரிய விவரங்களைப் பூர்த்திச் செய்து அதற்குரிய கட்டணத்தை கனரா வங்கி ரசீது வாயிலாகவோ அல்லது ஏதேனும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வரைவோலையாகவோ செலுத்தி அவர்கள் பயின்ற துறைகள்/ பட்ட மேற்படிப்பு மையம்,  தருமபுரி வழியாக விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் வரும் செப்டம்பர் 29- ஆம் தேதி ஆகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.