சேலம்,ஆக.25: சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் முன்பு பூ விற்பனை பெண் மீது மிளகாய் பொடி தூவி தாக்கிய 4 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் மனைவி ஜெயந்தி (58). இவர், கோட்டை மாரியம்மன் கோயில் முன்பு பூக்கடை வைத்துள்ளார். கடந்த 22 ஆம் தேதி பிற்பகல் கோயிலுக்கு 2 பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் ஜெயந்தியின் பூக்கடை முன்பு செருப்பை கழற்றியுள்ளனர். இதனை கவனித்த ஜெயந்தி, செருப்புகளை வைக்க தனியாக இடம் உள்ளது எனவும்,அங்கு சென்று வைக்கும்படியும் கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண்கள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்ததும், மீண்டும் அவர்கள் ஜெயந்தியிடம் தகராறு செய்துள்ளனர். அதன் பின் அங்கிருந்து சென்ற 2 பெண்களும், மாலை 5 மணியளவில் மேலும் 2 பெண், 2 ஆண் என 6 பேர் கொண்ட கும்பலாக வந்து, பூ வியாபாரி ஜெயந்தி, அவரது மகளிடம் தகராறு செய்து,பூக்கடையை தள்ளிவிட்டுள்ளனர். மேலும், இருவரது முகத்திலும் மிளகாய் பொடியை தூவி, உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர். அவர்கள் கூச்சலிட, அங்கிருந்து, 4 பெண்கள் உள்ளிட்ட 6 பேரும் தப்பிச் சென்றனர்.
இது குறித்து டவுன் காவல்நிலையத்தில் ஜெயந்தி புகார் செய்தார்.காவல் உதவி ஆய்வாளர் மஞ்சுளா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், பூ வியாபாரி ஜெயந்தியை தாக்கியது. அவர்கள் மீது மிளகாய் பொடி தூவி தாக்கியதாக 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


