ஆன்மிகம்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சேலத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். 

அதைத் தொடர்ந்து, சேலம் மாநகரில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். 

அதேபோல், சேலம் அம்மாபேட்டையில் உள்ள செங்குந்தர் அருள்மிகு மாரியம்மன் கோயில், காமராஜர் நகர் காலனியில் உள்ள அருள்சக்தி மாரியம்மன் கோயில், சத்யா நகரில் உள்ள மாரியம்மன் கோயில், சின்னக்கடை வீதியில் உள்ள சின்னமாரியம்மன் கோயில், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோயில், குகை மாரியம்மன் கோயில், சேலத்தாம்பட்டியில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோயில், சர்க்கார் கொல்லப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோயில், கொண்டலாம்பட்டி காட்டூரில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், நெத்திமேடு மணியனூரில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் இன்று (ஆகஸ்ட் 03) காலை 08.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. 

சேலம் குரங்குசாவடிக்கு அருகே உள்ள வெண்ணங்கொடி முனியப்பன் கோயிலில் முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள்,அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. சுமார் 200- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 

அதேபோல், சேலம் கோரிமேடு அருகே உள்ள அய்யந்திருமாளிகையில் உள்ள பூட்டு முனியப்பன் கோயிலில், முனியப்பனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து, முனியப்பன் உற்சவ சிலைக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. இதில், 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

அத்துடன், ஆடு, சேவல்கள், கோழிகளைப் பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.