சேலம், ஆக.25: சேலம் மாநகர காவல்துறையில் திங்கள்கிழமை முதல் அதிநவீன நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனை துணை ஆணையர்கள் சிவராமன், கேல்கர் சுப்பிரமணி பாலசந்திரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சேலம் மாநகரில் பொதுமக்களின் அவசர கால அழைப்புகளான 100 மற்றும் 112 எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை உடனடியாக ஏற்று, அவற்றுக்கு உதவி செய்யும் பொருட்டு, மாநகரின் அதிவிரைவு நடவடிக்கை குழு, அவசர சேவைக்கு பயன்படுத்தப்பட உள்ளன. அதிவிரைவு நடவடிக்கை குழுவுக்கு 3 நான்கு சக்கர வாகனங்களும், அவசர சேவைக்கு 9 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 5 இருசக்கர வாகனங்களும் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி உத்தரவின் பேரில், அந்தந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அவசர அழைப்புகளின் பேரில், இந்த வாகனங்களின் பயன்பாடுகுறித்து சம்பந்தப்பட்ட குழுவினரிடம் துணை ஆணையர்கள் சிவராமன், கேல்கர் சுப்பிரமணி பாலசந்திரா ஆகியோர் விரிவாக எடுத்துக் கூறினர். தொடர்ந்து, வாகனங்களின் பயன்பாடடை இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் துணை ஆணையர் எம்.ரவிச்சந்திரன், சமூக நீதி மற்றும் மக்கள் உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆணையர் கே.ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


