கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் (வயது 102) இன்று (ஜூலை 21) காலமானார். கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
யார் இந்த வி.எஸ்.அச்சுதானந்தன்?
கடந்த 1923- ஆம் ஆண்டு அக்டோபர் 20- ஆம் தேதி கேரளா மாநிலம், ஆலப்புழாவில் பிறந்தவர் வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன். சுருக்கமாக வி.எஸ்.அச்சுதானந்தன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த வி.எஸ்.அச்சுதானந்தன், வறுமையின் காரணமாக ஏழாவது வகுப்பிலே தனது பள்ளி படிப்பை முடித்துக் கொண்டார். துணிக்கடை, கயிறு தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்தார். தாயை 4 வயதிலும், தந்தையை 11 வயதிலும் இழந்த வி.எஸ்.அச்சுதானந்தன், தொழிற்சங்கத்தில் இணைந்தார்.
சுதந்திர போராட்டம் முதல் அரசியல்வாதி வரை.....!
கடந்த 1938- ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். 1940- ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார். பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரிவின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்து கொண்டு அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
24 ஆண்டுகள் பொலிட் பிரோ உறுப்பினர்!
கடந்த 1985- ஆம் ஆண்டு முதல் 2009- ஆம் ஆண்டு வரை சுமார் 24 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பிரோ உறுப்பினராக வி.எஸ்.அச்சுதானந்தன் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் பொறுப்பு பொலிட் பிரோ பதவி என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவை செதுக்கிய சிற்பி!
கடந்த 1965- ஆம் ஆண்டு முதல் 2016- ஆம் ஆண்டு வரை 7 முறை கேரளா மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் 2016- ஆம் ஆண்டு வரை கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை கேரளா மாநில முதலமைச்சராகப் பதவி வகித்த வி.எஸ்.அச்சுதானந்தன், கேரளா மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி அம்மாநில மக்களை வியப்பில் ஆழ்த்தினார். மேலும், இந்தியாவையே கேரளா பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
எளிமை, மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தியதன் மூலம் கேரளா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
வி.எஸ்.அச்சுதானந்தனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முதலமைச்சர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.


