ட்ரெண்டிங்

டாஸ்மாக் கடை விவகாரம்- சேலம் ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 

கொளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிய வழக்கில் சேலம் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் நிர்வாகம் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம். 

சேலம் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வார்டு கவுன்சிலர் சுஜிதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கொளத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதில் பார்க்கிங் மற்றும் பார் வசதி எதுவும் இல்லாததால் டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. 

கொளத்தூர் கிராம நிர்வாக அலுவலகம், வேளாண்மை அலுவலகம், மருத்துவமனை, பள்ளி கட்டிடங்கள் உள்ள பகுதியில் இருந்து 100 மீட்டருக்கு உள்ளாக சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் பொதுமக்களும், மாணவர்களும் தினந்தோறும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, மேட்டூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற டாஸ்மாக் நிர்வாகம், மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனு மீது உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுதாரர் அளித்த மனுவினை 8 வாரத்தில் பரிசீலித்து சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் சேலம் ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.