சேலம் மாவட்டத்தில் தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப தெரிவித்துள்ளதாவது, 2025- 2026 ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது, அறிவிப்பு எண்.5-ல் 20/10/2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து. அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 01/07/2025 முதல் www.onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
மேலும், அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20/10/2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30/06/2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, 15/05/2025 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.70 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
இதுபோன்று, மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படா மனைப்பிரிவுகளை வரன் முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்திற்கு பதிலாக 30/11/2025 வரை www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே தங்கள் விண்ணப்பங்களை பதிவுச் செய்யலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


