சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நேற்று (ஜூன் 29) மாலை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. உபரிநீர் வெளியேற்றப்படுவதை ஆட்சியர் டாக்டர்.பிருந்ததேவி, அமைச்சர் ராஜேந்திரன், சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேட்டூர் அணை கட்டிய 91 ஆண்டு கால வரலாற்றில் 44- வது முறையாக நிரம்பியுள்ளது. குறிப்பாக, ஜூன் மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டியது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பாக கடந்த 1957- ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. 16 கண் மதகுகள் வழியாக கரைபுரண்டோடிய காவிரி நீரை மேட்டூர் பாலத்தில் நின்றவாறு பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 58,000 கனஅடியிலிருந்து 48,000 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120.00 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் 48,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனிடையே, மேட்டூர் அணையின் 16 மதகுகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது வழக்கம். ஆனால் முதல் மூன்று மதகுகளில் நவீன முறையில் தூண் வலுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அதற்காக இரும்பு சாரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மூன்று மதகுகள் திறக்கப்படவில்லை எனவும் 13 மதகுகளில் மட்டும் உபரி நீர் வெளியேற்றப்படுவது இதுவே முதல்முறை எனவும் அதிகாரிகள் தகவல்.


