சேலம் மாவட்டத்தில் தற்பொழுது 108 நீர்நிலைகள் வண்டல் மண், களிமண் எடுக்க தகுதி வாய்ந்தவையாக கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, ஏரி, நீர்தேக்கங்கள் மற்றும் கால்வாய் போன்ற நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல், களிமண், மண் போன்றவற்றை அகற்றி விவசாய நிலங்களை மேம்படுத்தவும் மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் இலவசமாக அனுமதி வழங்க ஏதுவாக தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண்:14 இயற்கை வளங்கள் (எம்எம்சி.1) துறை நாள் 12.06.2024 -ல் தமிழ்நாடு சிறு கனிமச்சலுகை விதிகள் 1959-ன் விதி 12(2), (1)(2)(3) மற்றும் (4)-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அரசு கடிதம் எண்.590/எம்எம்சி. 1/20241 நாள் 25.06.2024-ல் வண்டல், களிமண், மண் போன்றவற்றை வெட்டியெடுத்து செல்வது தொடர்பாக நிலையான இயக்கமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சேலம் மாவட்டத்தில் தற்போது 108 நீர்நிலைகள் வண்டல். களிமண் போன்றவற்றை வெட்டியெடுத்து விவசாய பயன்பாடு மற்றும் மட்பாண்ட தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்ள தகுதி வாய்ந்தவைகளாக கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
அரசாணைகளில் தெரிவித்துள்ளபடி, விவசாய பயன்பாட்டிற்கு வண்டல், களிமண் போன்றவற்றை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றிற்கு நன்செய் நிலமெனில் 75 கனமீட்டர் அதாவது 25 டிராக்டர் லோடுகள் மற்றும் புன்செய் நிலமெனில் 90 கனமீட்டர் அதாவது 30 டிராக்டர் லோடுகள் என்ற கணக்கீட்டின்படியும். மண்பாண்ட தொழிலுக்கு நபர் ஒன்றுக்கு 60 கனமீட்டர் அதாவது 20 டிராக்டர் லோடுகள் வீதமும் இலவசமாக வெட்டியெடுத்துச்செல்ல 30 நாட்களுக்கு மிகாமல் நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படும்.
அரசின் நிலையான இயக்கமுறையில் தெரிவித்துள்ளவாறு விவசாய பயன்பாடு மற்றும் மட்பாண்ட தொழிலுக்கு வண்டல் களிமண் போன்றவற்றை இலவசமாக வெட்டியெடுத்துச் செல்ல விருப்பும் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள், அருகிலுள்ள இ- சேவை மையங்களில் தொடர்புடைய ஆவணங்களுடன் இணையதள வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதள வழியில் பெறப்படும் விண்ணப்பங்களை தொடர்புடைய வருவாய் வட்டாட்சியரால் பரிசீலிக்கப்பட்டு அதில், விவசாய பயன்பாட்டிற்கென வரப்பெற்ற விண்ணப்பமெனில், விண்ணப்பதாரரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் வருவாய்த்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இணையதள தரவுகள் மூலம் சரிபார்க்கப்படும்.
மண்பாண்ட தொழிலாளர்களிடமிருந்து மட்பாண்ட தொழில் செய்ய களிமண் வேண்டி வரப்பெற்ற விண்ணப்பமெனில், விண்ணப்பதாரரின் வசிப்பிடம் மற்றும் மண்பாண்ட தொழில் குறித்த மெய்த்தன்மை போன்றவற்றை சரிபார்த்து சான்றளிக்க கிராம நிர்வாக அலுவலருக்கு மாறுதல் செய்யப்படும். அதனை கிராம நிர்வாக அலுவலர் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் 7 தினங்களுக்குள் சரிபார்த்து அனுமதி அளித்தல் தொடர்பாக வட்டாட்சியருக்கு பரிந்துரைக்கப்படும்.
விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் அளித்த விபரங்கள் திருப்திகரமாக இருப்பின் விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து 10 தினங்களுக்குள் சம்மந்தப்பட்ட ஏரி, நீர்தேக்கத்திலிருந்து வண்டல், களிமண், சாதாரணமண் போன்றவற்றை இலவசமாக அகற்ற வட்டாட்சியரால் அனுமதி வழங்கப்படும்.
வட்டாட்சியரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை கிடைத்தவுடன் பயனாளிகள் சம்மந்தப்பட்ட ஏரி, நீர்தேக்கத்தின் பொறுப்பு அலுவலரை அணுகி அவரால் குறியீடு செய்து காட்டப்படும் பகுதியில் மட்டும் குறிப்பிட்ட ஆழத்திற்கு மிகாமல் அனுமதிக்கப்பட்ட அளவு வண்டல், களிமண், சாதாரணமண் சொந்த செலவில் அகற்றி எடுத்துச் செல்ல வேண்டும்.
எனவே, இந்த அரிய வாய்ப்பினை விவசாய பெருமக்கள் மற்றும் மட்பாண்ட தொழிலாளர்கள் அதிகளவில் பயன்படுத்தி தங்களது விவசாய நிலங்களை மேம்படுத்திக்கொள்ளவும். மட்பாண்ட தொழிலாளர்கள் தங்களது தொழிலை தங்கு தடையின்றி சிறப்புற செய்யவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி
தெரிவித்துள்ளார்.



