தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சேலம் மாவட்டம், ஏற்காடு மலை, ஏலகிரி மலைக்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகள், இயற்கை எழில்கொஞ்சும் மலையின் அழகினை கண்டு ரசிக்கவும், ரோப் காரில் பயணித்து புதிய பயண அனுபவங்களைப் பெறும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த ரோப் கார் அமைத்திட தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மற்றும் பூலாம்பட்டி (காவேரி நீர்தேக்கப்பகுதி) ஆகிய சுற்றுலாத் தலங்களில் ரூபாய் 20 கோடியில் வாகன நிறுத்துமிடம், பூங்காக்கள், உணவுக்கூடம், நடைபாதை மற்றும் தகவல் மையம் ஆகிய மேம்படுத்தப்பட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைப்பகுதி, அமராவதி அணைப்பகுதி, ஆழியார் அணைப்பகுதி, பவானிசாகர் அணைப்பகுதி, கிருஷ்ணகிரி அணைப்பகுதி, வைகை அணைப்பகுதி ஆகிய இடங்களில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் சிறந்த சுற்றுலா உட்கட்டமைப்பை ஏற்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதி, கோமுகி அணை, மணிமுக்தா அணை மற்றும் சேலம் மாவட்டம், கருமந்துறைப் பழப்பண்ணை ஏரி ஆகிய பகுதிகளில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாப் பயணிகளுக்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.


