சேலம் மாவட்டத்தில் 50% மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்ததாவது, கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2025-26ஆம் நிதியாண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்த மாவட்டம் ஒன்றுக்கு திறமையும், ஆர்வமும் உள்ள 10 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் கொண்டவராகவும், அந்நிலம் மனித குடியிருப்புகளிலிருந்து விலகியும் இருக்க வேண்டும்.
நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க தேவையான மொத்த செலவில் 50% மானியம் அதிகட்சமாக ரூபாய் 1,65,625 வரை மாநில அரசால் வழங்கப்படும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து 50% மானியத்தில் வழங்கப்படும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30% தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 2022-23, 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்திருக்கக் கூடாது. 3 ஆண்டு காலம் கோழிப்பண்ணையை பராமரிப்பவராக இருத்தல் வேண்டும்.
மேலும் இத்திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



-hcTFAGMRGb.jpg)