ட்ரெண்டிங்

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமினை பார்வையிட்ட ஆட்சியர்! 


சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜூன் 27) திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட நடைபெற்ற ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக சமூக நலத்துறை, தாட்கோ, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் வழிகாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அவர்களுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம் மருத்துவ காப்பீடு அட்டை, சுயதொழில் மானியம் மற்றும் திறன் பயிற்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் இன்றையதினம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

இம்முகாமில் மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் சுய தொழில் தொடங்க மானியம் பெறுவதற்கான விண்ணப்பம் பெறும் பணிகளும், தேர்தல் பிரிவு மூலம் திருநங்கைகள் வாக்காளர் அட்டை பெற விண்ணப்பிக்கும் பணிகளும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் ஆதார் அட்டையில் திருத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 599 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 197 ஓய்வூதியமும், 39 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சமூக நலத்துறையின் மூலம் சுய தொழில் தொடங்க இதுவரை 25 திருநங்கைகளுக்கு சுய தொழில் மானியம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநங்கைகளுக்கு கைபேசி செயலி மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. திருநங்கைகள் அனைவரும் அடையாள அட்டைகளை பெறுவதன் மூலம் அரசின் அனைத்து திட்டங்களும் முழுமையாக பெற்று பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.


குறிப்பாக திருநங்கைகளின் உயர்கல்வியை உறுதிப்படுத்தும் விதமாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் உதவி தொகை வழங்கும் திட்டம் தற்போது திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் உயர்கல்வி பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக்கட்டணம். விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை திருநங்கைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோன்று திருநங்கைகளுக்கு கால்நடை வளர்ப்பு, மளிகைக் கடை உள்ளிட்ட சிறு தொழில் துவங்க இணையதளத்தில் விண்ணப்பித்த திருநங்கைகளுக்கு ரூபாய் 40,000 மானியம் மகளிர் திட்டம் துறையின் கீழ் வழங்கப்படுகிறது. இம்முகாமில், குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், ஓய்வூதியம் மற்றும் பட்டா வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அரசின் சேவைகள் பெறும் வகையில் 200- க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றுப் பயனடைந்தனர். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இம்முகாமில், மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா, மாவட்ட மேலாளர் தாட்கோ (பொ) வளர்மதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.