ட்ரெண்டிங்

சேலத்தில் தொண்டு நிறுவனங்கள் மூலம் அன்புச்சோலை மையங்கள் அமைகிறது! 



சேலம் மாவட்டத்தில் வசிக்கும் மூத்த குடிமக்களின் பகல் நேர பராமரிப்பிற்காக தொண்டு நிறுவனங்கள் மூலம் 2 அன்புச்சோலை மையங்கள் தொடங்கப்படவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப., தமிழ்நாட்டிலுள்ள மூத்த குடிமக்களின் நலன் கருதி 13 மாவட்டங்களில் 25 இடங்களில் பகல் நேர பராமரிப்பு மையமான அன்புச்சோலை மையங்கள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் வசிக்கும் மூத்த குடிமக்களின் பகல் நேர பராமரிப்பிற்காக தொண்டு நிறுவனங்கள் மூலம் 2 அன்புச்சோலை மையங்கள் தொடங்கப்படவுள்ளது. 

அன்புச்சோலை மையம் நடத்துவதற்கு ஒரே நேரத்தில் 50 முதியோர்கள் தங்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும். பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான வசதிகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் முறையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். முதியோர்கள் எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். அன்புச்சோலை மையம் தொடங்கும் தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். முதியோர் பராமரிப்பில் அனுபவமுள்ள ஊழியர்களை கொண்டிருக்க வேண்டும்.

எனவே சேலம் மாவட்டத்தில் அன்புச்சோலை மையம் நடத்த ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை வரும் ஜூலை 07- ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.126-ல் சமர்ப்பிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இத்திட்டத்திற்கு தகுதியுள்ள தொண்டு நிறுவனங்கள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர். இதர விவரங்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியரகம், முதல் தளம் அறை எண்.126-ல் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.