சேலம் அரசு கலைக்கல்லூரியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் கூடுதலாகக் கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறைக் கட்டடங்களை இன்று (மார்ச் 10) சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியும், மருத்துவமும் 2 கண்களாகக் கருதி சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதற்கேற்ப பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் மருத்துவத்துறைகளுக்கு அதிக முக்கியத்துவமும் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறைக்கென அதிகளவிலான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். எதிர்கால தலைமுறையினர் ஆகிய மாணவ, மாணவிகள் கல்வியில் மட்டுமில்லாமல் வேலைவாய்ப்புகளிலும் மேம்படும் வகையில் நான் முதல்வன் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 5,000 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த அரசுக் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மட்டும் 734 பேர் பயன்பெற்றுள்ளனர்.
குறிப்பாக, புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் மூலம் மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு ரூபாய் 36,000 எனவும், ஐந்து ஆண்டுகள் படித்தால் ரூபாய் 50,000 என்ற வகையிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. அதேபோன்று, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகள் பயன்பெறும் வகையில் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் மாணவ,மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
மாண்புமிகு பாராட்டும் வகையில் சிறப்பான நிர்வாகத்தினை வழங்கி வருகிறார். அதேபோன்று வளர்ந்துவரும் நவீன காலத்திற்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார். அந்த வகையில் உயர்கல்வித்துறையின் சார்பில் சேலம் -7.அரசு கலைக் கல்லூரியில் ரூபாய் 1.80 கோடி மதிப்பீட்டில் கூடுதலாகக் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைக் கட்டடங்கள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் நூலகம் வேண்டுமென இக்கல்லூரி மாணவ, மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து கல்விக்கு பேருதவிபுரியும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய திட்டங்களை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கல்லூரி முதல்வர் முனைவர் செண்பகவள்ளி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


