சேலம் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி முன்னிலையில் அஸ்தம்பட்டி பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப்பின் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து கண்காணித்திட அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் சேலம் மாவட்டம் முழுவதும் குடிநீர் தொடர்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்றைய தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுவரும் குடிநீரின் அளவு மற்றும் குடிநீரின் தேவைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சேலம் மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் வழங்கிடுவதை அலுவலர்கள் உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்கோற்றம் குறித்தும், நடைபெற்று வரும் குடிநீர் மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் எவ்வித மின்தடையும் இல்லாமல் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்திடவும், குடிநீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்திட வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று குடிநீர் குழாய்கள் செல்லும் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும்போது பாதுகாப்பாக குடிநீர் குழாய்களுக்கு பழுது ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ளவும். குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் எதேனும் இருப்பின் அவற்றை போர்க்கால அடிப்படையில் விரைந்து சீரமைத்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குருராஜன், மாநகரப் பொறியாளர் செல்வநாயகம், செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், திலகா, செந்தில்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


